< Back
உலக செய்திகள்
கொரோனா பெருந்தொற்று தோற்றம் கண்டறியும் பணி, பதில் கிடைக்கும் வரை தொடரும்:  உலக சுகாதார அமைப்பு உறுதி
உலக செய்திகள்

கொரோனா பெருந்தொற்று தோற்றம் கண்டறியும் பணி, பதில் கிடைக்கும் வரை தொடரும்: உலக சுகாதார அமைப்பு உறுதி

தினத்தந்தி
|
16 Feb 2023 12:12 PM IST

கொரோனா பெருந்தொற்று தோன்றியது எப்படி? என கண்டறியும் பணியானது, பதில் கிடைக்கும் வரை தொடரும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.


ஜெனீவா,


உலக நாடுகளை 3 ஆண்டுகளாக பாதிப்பிற்கு உள்ளாக்கிய கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் பல நாடுகளில் இன்னும் குறையாமல் உள்ளது. அதன் தாக்கம் மனிதர்களிடம் தொடர்ந்து வருகிறது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்டது.

3 ஆண்டுகளை கடந்த பின்னரும் பல்வேறு நாடுகளில் அதன் பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன. பல அலைகளாக பரவிய அவற்றால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. தரை, வான், ரெயில் போக்குவரத்து முடக்கத்தினால், பொருளாதார சரிவை நாடுகள் சந்தித்தன. லட்சக்கணக்கான மனித உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானோருக்கு கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒருபுறம், சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது என உலக நாடுகள் சந்தேகம் எழுப்பின. ஆனால், சீனா அதனை மறுத்தது. அதுபற்றி உலக சுகாதார அமைப்பு தனது விசாரணையை தொடங்கியது. நேரடி விசாரணையும் நடத்தியது. எனினும், போதிய தகவல் கிடைக்க பெறாமல் உள்ளது.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று எப்படி தோன்றியது? என்பது பற்றி கண்டறியும் பணியை உலக சுகாதார அமைப்பு கைவிட்டு விட்டது என நேச்சர் என்ற வலைதளத்தில் வெளியான அறிக்கை ஒன்று தெரிவித்தது.

சீனாவிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்க பெறாத சூழலில், இந்த தேடுதலை கைவிட்டு விட்டது என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் கூறும்போது, பதில் கிடைக்கும்வரை நாம் தொடர்ந்து முன்னேற வேண்டி உள்ளது என குறிப்பிட்டார்.

சார்ஸ் கொரோனா வைரசானது எப்படி வந்தது? மற்றும் மனிதர்களிடையே எப்படி பரவ தொடங்கியது? என்பது பற்றிய அறியப்படாத விசயங்களை அறிந்து கொள்வது, வருங்கால பெருந்தொற்றுகளை தவிர்ப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.

சமீபத்தில் சீனாவின் உயரதிகாரி ஒருவருக்கு கடிதம் ஒன்றின் வழியே, ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொண்டுள்ளேன். ஏனெனில், பெருந்தொற்று எப்படி தொடங்கியது? என்பது பற்றிய தகவலில் வெளிப்படை தன்மை மற்றும் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது என கேட்டு கொண்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்