< Back
உலக செய்திகள்
உக்ரைன் போர் சூழல்; ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா புதின்...?
உலக செய்திகள்

உக்ரைன் போர் சூழல்; ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா புதின்...?

தினத்தந்தி
|
10 Dec 2022 11:06 AM IST

உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்வாரா? என்பது பற்றி அந்நாட்டு ஜி-20 ஷெர்பா பதிலளித்து உள்ளார்.



மாஸ்கோ,


ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. 2-வது நாள் நடந்த பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம். நாம் அனைவரும் இணைந்து ஜி-20 அமைப்பை உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உருவாக்குவோம் என கூறினார்.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, குறிக்கோள் நிறைந்த, முடிவான மற்றும் செயல் சார்ந்து இருக்கும் என்றும் கூறினார். இதன்பின்பு, ராஜஸ்தானின் உதய்ப்பூரில் ஜி-20 ஷெர்பாக்கள் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் கடந்த 4-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், 40-க்கும் மேற்பட்ட ஷெர்பா குழுக்கள் வருகை தந்தன. அவர்களுக்கு மாநில பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜி-20 மாநாட்டு தலைவர்களுக்கான கூட்டம் வருகிற 2023-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதனை இந்திய அமைப்பாளர்கள் முறைப்படி அறிவித்து உள்ளனர்.

சர்வதேச அளவில் உக்ரைன் போர் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சூழலில், இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்வாரா? என்ற கேள்விக்கு அந்நாட்டு தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி ரஷிய ஜி-20 ஷெர்பா குழுவின் தலைவரான ஸ்வெட்லானா லுகாஷ் அந்நாட்டு அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியின்போது, ஜி-20 மாநாட்டுக்கு அவர் (ரஷிய அதிபர் புதின்) நிச்சயம் செல்வார் என நம்புகிறேன்.

ஆனால், இந்த விசயத்தில் அவரே முடிவெடுக்க வேண்டும். அடுத்த மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அதனால், இதுபோன்ற கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. எனக்கு தெரிந்தவரை, அவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனைத்து வகையிலும் வாய்ப்புகள் உள்ளன என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்