< Back
உலக செய்திகள்
உக்ரைன் போரில் அணு அயுதம் பயன்படுத்த முடிவு...? ரஷிய தூதர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு
உலக செய்திகள்

உக்ரைன் போரில் அணு அயுதம் பயன்படுத்த முடிவு...? ரஷிய தூதர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

தினத்தந்தி
|
3 April 2023 11:06 AM IST

பெலாரஸ் நாட்டு எல்லை அருகே அணு ஆயுதங்களை குவிக்க ரஷியா முடிவு செய்து உள்ளது என ரஷிய தூதர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.



தல்லின்,


நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா படையெடுப்பை நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரியுடன் ஓராண்டை நிறைவு செய்தும் போர் முடிவுக்கு வராத சூழல் உள்ளது.

போரானது தொடர்ந்து, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து நீடித்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்து வருகின்றன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் புதின் முன்வைத்து உள்ளார்.

போரின் தொடக்கத்தில் இருந்து, உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், ரஷியாவை அச்சுறுத்த பொருளாதார தடைகளை விதித்து பார்த்தது. அது பலன் தரவில்லை. உக்ரைனுக்கு தேவையான பீரங்கிகள், ராக்கெட் குண்டுகள் போன்ற ஆயுதங்களை வழங்கி ஆதரவை நீட்டித்து வருகின்றன. கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களுடன், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன.

ரஷியாவுக்கு பெலாரஸ் நாடு ஆதரவான வகையில் செயல்பட்டு வருகிறது என ஆரம்பத்தில் இருந்து கூறப்பட்டது. இந்த தகவலை பெலாரஸ் அரசு மறுக்கவில்லை. இந்நிலையில், நேட்டோ நாடுகளை ஒட்டிய பெலாரஸ் நாட்டின் எல்லை அருகே அணு ஆயுதங்களை குவிக்க ரஷியா முடிவு செய்து உள்ளது.

இதுபற்றி பெலாரஸ் நாட்டுக்கான ரஷிய தூதர் போரிஸ் கிரைஸ்லோவ், பெலாரஸ் நாட்டு அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, எங்களுடன் ஒருங்கிணைந்த நாட்டின் மேற்கத்திய எல்லை பகுதியில் ரஷியாவின் அணு ஆயுதங்கள் குவிக்கப்படும் என கூறியுள்ளார்.

எனினும், எந்த பகுதி என அவை குவிக்கப்படும் குறிப்பிட்ட இடம் பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை. அது எங்களது தற்காப்பு திறனை விரிவாக்கம் செய்யும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் அனைத்து வித சத்தங்களையும் கவனத்தில் கொள்ளாமல் அது நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். இதனை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை உறுதி செய்து உள்ளது.

இதேபோன்று, ஏ.பி.சி. நியூஸ் வெளியிட்ட செய்தியில், ரஷியாவின் அண்டை நாடுகள் மற்றும் கூட்டணி நாடுகளின் எல்லை பகுதிகளில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் திட்டங்கள் உள்ளன என அதிபர் புதின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை சுட்டி காட்டியுள்ளது.

ரஷியா குறிப்பிட்டு உள்ள அணு ஆயுதங்கள் சற்று வீரியம் குறைவான ஆயுதங்கள் என்றபோதும், அது உயிர்களுக்கு அழிவை உண்டு பண்ண கூடியவை ஆகும்.

இதற்காக பெலாரசில் அணு அயுதங்களை சேமித்து வைக்க கூடிய சேமிப்பு கிடங்குகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, அவை வருகிற ஜூலை 1-ந்தேதிக்குள் நிறைவடையும் என்றும் புதின் தெரிவித்து உள்ளார்.

பெலாரஸ் நாட்டின் போர் விமானங்கள், அணு ஆயுதங்களை சுமந்து செல்ல கூடிய திறன் படைத்தவையாக உருமாற்றம் செய்வதற்கான உதவிகளை ரஷியா செய்து உள்ளது என்றும் புதின் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்