< Back
உலக செய்திகள்
தைவானின் ஜனநாயக பாதுகாப்புக்கு அமெரிக்கா இரும்பு கவசம் போல் துணை நிற்கும்; பெலோசி பரபரப்பு பேச்சு
உலக செய்திகள்

தைவானின் ஜனநாயக பாதுகாப்புக்கு அமெரிக்கா இரும்பு கவசம் போல் துணை நிற்கும்; பெலோசி பரபரப்பு பேச்சு

தினத்தந்தி
|
3 Aug 2022 9:34 AM IST

தைவானின் ஜனநாயக பாதுகாப்பில் அமெரிக்காவின் தீர்மானம் தொடர்ந்து இரும்பு கவசம் போல் இருக்கும் என நான்சி பெலோசி பேசியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தைபே,

சீனாவில் இருந்து பிரிந்து சென்ற தைவான், சொந்த அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆகியவற்றுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாக பார்க்கிறது. ஆனால் சீனாவோ, தைவானை தனது கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதி என்று கூறி வருகிறது.

ஆனால், தைவானுக்கும், அதன் நிலைப்பாட்டுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (வயது 82), தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் தைவானை சேர்த்துக்கொண்டார். அவர் தைவானுக்கு பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளிவந்தன. உடனே சீனா எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியது. நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால், அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரித்தது.

ஆனால் சீனாவின் எதிர்ப்பை புறந்தள்ளும் வகையில் நான்சி பெலோசியின் தைவான் பயணம் உறுதியானது. இதனால் உலக அரங்கில் பெரும் பரபரப்பு உருவானது. அமெரிக்காவின் 13 போர் விமானங்கள், ஜப்பானில் உள்ள அமெரிக்க படைத்தளங்களில் இருந்து புறப்பட்டன. இந்த விமானங்கள், நான்சி பெலோசியின் தைவான் பயணத்தின்போது, அவரது விமானத்துக்கு பாதுகாப்பாக அணிவகுத்து செல்லும் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நான்சி பெலோசி நேற்று மலேசியா சென்றார். அந்த நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து அவரது விமானம் (சி-40பி) தைவான் புறப்பட்டது.

நான்சி பெலோசியின் விமானம் தைவான் வான்பரப்புக்குள் சென்றதும் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவரது விமானத்துக்கு தைவான் போர் விமானங்கள் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வானில் வலம் வந்தன. மற்றொரு புறம் சீனாவின் 4 போர் விமானங்கள் தைவான் வான் வெளியில் நுழைந்துள்ளன. இத்தனை பரபரப்பு, பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகரான தைபேயில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.42 மணிக்கு (இந்திய நேரம் நேற்று இரவு 8.12 மணி) தரை இறங்கியது. இதனால் அடுத்தது என்ன என்ற பரபரப்பு உலக அரங்கில் நிலவுகிறது.

இந்த சூழலில், பெலோசியின் பயணம் ஒரே சீனா என்ற கொள்கையை அத்துமீறிய தீவிர செயல் என கூறியுள்ள சீனா, தைவான் நாடு மீது வர்த்தக தடைகளை விதித்து உள்ளது. தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை குழித்தோண்டி புதைக்கும் வகையில் இந்த பயணம் அமைந்து உள்ளதுடன், தைவான் சுதந்திரத்திற்கான பிரிவினைவாத சக்திகளுக்கு, ஒரு தீவிர தவறான சமிக்ஞையை அனுப்பியுள்ளது என்றும் சீனா தெரிவித்து உள்ளது.

தைபேயில் சென்று இறங்கிய பின்பு பெலோசி கூறும்போது, தைவானின் ஜனநாயகத்திற்கு ஆதரவு தருவதில் தனது நாடு உறுதியான ஈடுபாட்டுடன் இருக்கிறது என மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். சுயாட்சி செய்யும் தைவான் தீவின் மீது, அமெரிக்கா நீண்ட காலம் கொண்டுள்ள கொள்கையில் தனது பயணம், எந்தவிதத்திலும் முரண்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்பின்பு தைவான் நாட்டு அதிபர் சைஇங்-வென்னை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அமெரிக்க சபாநாயகர் பெலோசி தைவானில் பேசும்போது, வளர்ந்து வரும் ஜனநாயகம் கொண்டது தைவான். சவால்களை சந்தித்தபோதிலும், அமைதி மற்றும் வளமிக்க எதிர்காலம் ஆகியவற்றை நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவை கட்டியெழுப்பும் என உலகிற்கு நிரூபித்து உள்ளது என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பெலோசி பேசும்போது, தற்போது, இதுவரை இல்லாத வகையில், தைவானுடன் அமெரிக்கா நல்லிணக்கத்துடன் இருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செய்தியையே நாங்கள் இன்று உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை உலகம் இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தைவான் மற்றும் உலக நாடுகளில் ஜனநாயக பாதுகாப்பு பற்றிய அமெரிக்காவின் தீர்மானம் தொடர்ந்து இரும்பு கவசம் போல் இருக்கும் என அவர் பேசியுள்ளார். இதனால், ஒரே சீனா கொள்கைக்கு எதிராக மற்றும் சீன-அமெரிக்க உறவில் விரிசில் ஏற்படும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்