< Back
உலக செய்திகள்
கிழக்கு காங்கோவில் பரிதாபம்: ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
உலக செய்திகள்

கிழக்கு காங்கோவில் பரிதாபம்: ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

தினத்தந்தி
|
29 July 2022 6:30 AM IST

கிழக்கு காங்கோவில் நடைபெற்ற ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கின்ஷாசா:

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அந்த நாட்டின் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை காலி செய்து விட்டு ஓடி விட்டனர்.

அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா. அமைதிப்படை உள்ளது. ஆனால் அந்த அமைதிப்படை, தனது கடமையை சரிவரச்செய்வதில்லை, கிளர்ச்சிப்படைகள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

3 நாட்களாக நடந்த போராட்டத்தில் மட்டும் ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 3 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதை அந்த நாட்டின் அரசு செய்தி தொடர்பாளர் பேட்ரிக் முயாயா உறுதிப்படுத்தினார்.

இதற்கு மத்தியில் நேற்று முன்தினம் கிழக்கு காங்கோவில் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள கிலோமோனி மாவட்டத்தில் ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மக்கள் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பி அறுந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது விழுந்து தாக்கியது.

இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியானார்கள். இது ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரிதாப சம்பவத்தை உவிரா நகர துணை மேயர் கிகி கிபாரா உறுதிசெய்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "சம்பவ இடத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்தபோது நான் இருந்தேன். போலீசாரும், பாதுகாப்பு படையினரும் கூட்டத்தைக் கலைக்காமல் இருந்திருந்தால், பலி எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். நானும் கிட்டத்தட்ட இறந்து விட்டேன். ஆனால் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினேன்" என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்