சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்... தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்
|சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஒரு நாளைக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பீஜிங்,
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன. தற்போது பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால் தினசரி பாதிப்புகளும் குறைந்து உள்ளது.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து உள்ளது. சீனாவில் சமீப நாட்களாக தடுப்பூசிகள் போடுவது அதிகரித்து வருகிறது.
சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவின் படி, கடந்த செவ்வாயன்று 14 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து நாளைக்கு லட்சக்கனக்கானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.