"நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது" - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
|இலங்கை வரலாறு காணாத வகையில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
கொழும்பு,
இலங்கை வரலாறு காணாத வகையில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நிய செலவாணி கையிருப்பு தீர்ந்து போனதால், எரிபொருளை கொள்முதல் செய்ய முடியாத நிலைக்கு இலங்கை பொருளாதாரம் சென்றது. இதனால், அங்கு பெட்ரோல், டீசல் நிலையங்களில் தட்டுப்பாடு நிலவியது. மின்சார நெருக்கடியும் ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இலங்கை மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
மக்களின் ஒட்டு மொத்த கோபமும் ராஜபக்சே குடும்பத்தினர் மீது திரும்பியதால் வேறு வழியின்றி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். இக்கட்டான சூழலில், நிதித்துறையும் ரணில் விக்ரமசிங்கேவிடமே அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் மோசமான நிலைமையை கடக்க வேண்டுமானால், ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளப்போகும் உணவு பற்றாக்குறை குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது போதிய உரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விவசாய பொருட்களை தடையின்றி வழங்குவதையும், வினியோகிப்பதையும் உறுதிசெய்யும் புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.