அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க சென்ற இளம்பெண்ணின் உடைமைகள் திருட்டு... தெருக்களில் சுற்றித்திரியும் அவலம் - மத்திய மந்திரி உதவ வேண்டுகோள்...!
|அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க ஐதராபாத்தில் இருந்து சென்ற இளம்பெண் சிகாகோ நகர தெருக்களில் அவர் சுற்றி திரிகிறார்.
நியூயார்க்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மவுலா அலி பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில், 2 மாதங்களாக அவரது தாயார் சையிடா வகாஜ் பாத்திமாவால் மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அதிக கவலையில் இருந்த அவருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
ஐதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், பாத்திமாவை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகள் மனஅழுத்தத்தில் உள்ளார். அவரது உடைமைகளை யாரோ சிலர் திருடி சென்று விட்டனர். இதனால், உணவு வாங்க கூட பணம் இன்றி பசியால் வாடி வருகிறார். சிகாகோ நகர தெருக்களில் அவர் சுற்றி திரிகிறார் என கூறியுள்ளனர்.
இதுபற்றி மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தனது மகளை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் காலீகுர் ரகுமான் தனது டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.