< Back
உலக செய்திகள்
தென்கொரியா நாடாளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சி அபார வெற்றி - 189 இடங்களை கைப்பற்றி சாதனை
உலக செய்திகள்

தென்கொரியா நாடாளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சி அபார வெற்றி - 189 இடங்களை கைப்பற்றி சாதனை

தினத்தந்தி
|
12 April 2024 4:25 AM IST

சியோல்,

தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அதிபருக்கு அடுத்தபடியான அதிகாரத்தில் இருப்பவர் பிரதமர் ஆவார்.

அதன்படி ஆளும் மக்கள் சக்தி கட்சி கூட்டணி சார்பில் ஹான் டக்-சூ பிரதமராக இருந்தார். இவரது பதவிக்காலம் முடிவதால் நேற்று முன்தினம் (புதன்கிழமை) அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் நீண்ட ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தென்கொரியாவை பொறுத்தவரை மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கூட்டணி 189 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் பழமைவாத கட்சி கூட்டணி வெறும் 111 இடங்களை மட்டுமே வென்றுள்ளன.

இதன் மூலம் 5-ல் 3 பங்கு இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது. எனவே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹான் டக்-சூ மற்றும் அதிபரின் மூத்த ஆலோசகர்கள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூனும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். முக்கிய தலைவர்கள் பதவி விலகுவது அதிபர் யூன் சுக் இயோலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அதேசமயம் 200 இடங்களை வென்று அதிபரை பதவி நீக்கம் செய்யக்கூடிய சூப்பர் மெஜாரிட்டியை அவர்கள் பெறவில்லை. எனினும் மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு அதிபர் யூன் சுக் இயோல் தீவிரமான அரசியல் எதிர்ப்பை சமாளிக்க நேரிடும் என அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்