< Back
உலக செய்திகள்
ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலம் குண்டுவெடிப்பில் பலத்த சேதம்
உலக செய்திகள்

ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலம் குண்டுவெடிப்பில் பலத்த சேதம்

தினத்தந்தி
|
8 Oct 2022 3:01 PM IST

ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலம் குண்டுவெடிப்பில் பலத்த சேதம் அடைந்து உள்ளது.



மாஸ்கோ,


ரஷியாவுடன் கிரீமிய தீபகற்ப பகுதி இணைக்கப்பட்ட பின்னர், ரஷிய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி 2018-ம் ஆண்டு திறந்து வைத்து உள்ளார். கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலம் ஆனது ரஷியாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது.

இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2020-ம் ஆண்டு முழு அளவில் இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில், உக்ரைனுடன் ரஷியா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுத்து உள்ளது. 6 மாதங்களை கடந்த இந்த போரின் ஒரு பகுதியாக உக்ரைனின் டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், ஜபோரிஜ்ஜியா மற்றும் கெர்சன் ஆகியவற்றை ரஷியா தன்னுடன் சமீபத்தில் இணைத்து அறிவிப்பு வெளியிட்டது. இது உக்ரைனை ஆத்திரமடைய செய்தது.

ரஷியாவின் தளவாட பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட உக்ரைன் அதன்படி, இந்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என கூறப்படுகிறது.

இதுபற்றி ரஷியாவின் பயங்கரவாத ஒழிப்பு குழு வெளியிட்டு உள்ள செய்தியில், ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது இன்று காலை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது.

இதில், வாகன பிரிவில் உள்ள சாலை பகுதியளவு சேதமடைந்தது. அதற்கு இணையாக செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றின் மீதும் தீப்பொறி பறந்து பற்றி கொண்டது.

இதில், ரெயிலின் 7 எரிபொருள் அடங்கிய பெட்டிகள் தீப்பிடித்து கொண்டன என தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பாலத்தில், ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்