< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானுக்கு போர் விமானம் வழங்கிய விவகாரம்:  அமெரிக்காவை கடுமையாக சாடிய மத்திய மந்திரி ஜெய்சங்கர்
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு போர் விமானம் வழங்கிய விவகாரம்: அமெரிக்காவை கடுமையாக சாடிய மத்திய மந்திரி ஜெய்சங்கர்

தினத்தந்தி
|
26 Sep 2022 4:39 AM GMT

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு போர் விமானம் வழங்கிய விவகாரத்தில் கடுமையாக சாடி பேசியுள்ளார்.



வாஷிங்டன்,


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கடந்த சனிக்கிழமை இந்த கூட்டம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, அடுத்த 3 நாட்கள் அவர் வாஷிங்டனில் செலவிடுகிறார்.

இதில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயரதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேச இருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன், ரூ.3 ஆயிரத்து 667 கோடி மதிப்பிலான எப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. 2018-ம் ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் கூட்டத்தில் இருந்தவர்கள் சார்பில் வினா எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இந்த உறவு முறைக்கு அமெரிக்காவே இன்று உண்மையில் பதிலுரைக்க வேண்டும். இதனை வழங்கியதில் அவர்களுக்கு என்ன கிடைத்தது என அவர்கள் கூற வேண்டும்.

ஒரு சிலர் கூறலாம். நாங்கள் இதனை செய்கிறோம். ஏனெனில், இவை அனைத்தும் பயங்கரவாத ஒழிப்புக்கான செயல் என்று. ஆனால், எப்-16 போன்ற திறன் படைத்த விமானங்களை பற்றி பேசும்போது, ஒவ்வொருவருக்கும் அது பற்றி நன்றாக தெரியும்.

அதனை பெறுபவர்கள் எங்கே அவற்றை குவிக்கிறார்கள் மற்றும் அவர்கள் பயன்பாடு என்ன என்பது பற்றியும் உங்களுக்கு தெரியும். இதுபோன்ற விசயங்களை கூறி விட்டு, நீங்கள் யாரையும் முட்டாளாக்கவில்லையா? என குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் நான் பேசியிருந்தால், உண்மையில் இந்த விவகாரத்தில், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று பேசியிருப்பேன் என உறுதிப்பட ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா போர் விமானங்களை வழங்கும் முடிவை தொடர்ந்து, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ஆஸ்டினை உடனடியாக தொடர்பு கொண்டு இந்தியாவின் கவலையை வெளியிட்டார்.

மேலும் செய்திகள்