< Back
உலக செய்திகள்
12 முறை துப்பாக்கியால் சுட்டும்... உயிர் பிழைத்த இஸ்ரேல் ராணுவ வீராங்கனையின் திகில் அனுபவம்
உலக செய்திகள்

12 முறை துப்பாக்கியால் சுட்டும்... உயிர் பிழைத்த இஸ்ரேல் ராணுவ வீராங்கனையின் திகில் அனுபவம்

தினத்தந்தி
|
12 Dec 2023 6:15 PM IST

அவருடைய தைரியத்திற்காக இஸ்ரேல் அதிபர் ஹெர்ஜாக்கிடம் இருந்து விருது ஒன்றும் கிடைத்துள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் எல்லைக்குள், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி திடீரென புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். எதிரில் வந்தவர்களை துப்பாக்கியால் சுட்டனர்.

வீடுகள், கட்டிடங்களை உடைத்து, சூறையாடினர். ஒளிந்து கொண்டவர்களை தேடி பிடித்து கொலை செய்தனர். இந்த தாக்குதலின்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரால் சுடப்பட்டவர்களில், இஸ்ரேல் ராணுவ வீராங்கனையான லெப்டினென்ட் ஈடன் ராம் என்பவரும் ஒருவர். அவர் கடுமையான சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்திருக்கிறார்.

அவர் தன்னுடைய திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், கடந்த அக்டோபர் 7-ந்தேதி சனிக்கிழமையன்று பயங்கர படம் போன்று நடந்த சம்பவத்தில் நிஜத்தில் இருந்தவள் நான்.

என்னுடன் இருந்த சக வீராங்கனைகள் 6 பேருடன் அறை ஒன்றில் நான் மாட்டிக்கொண்டேன் என கூறுகிறார். ஈடன் ராமின் காலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஹமாஸ் அமைப்பினர், ஒவ்வொரு பாதுகாப்பு கதவாக உடைத்து கொண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை அடையும் வரை காத்திருந்தனர். அதன்பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் படை சுட்டு கொன்றது.

இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளால் 12 முறை ராம் துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார். மற்றவர்களும் சுடப்பட்டனர். அவர், காயத்துடன் கிடந்ததுபற்றி கூறும்போது, நான் உயிருடன் இருக்கிறேனா? அல்லது இல்லையா? என எனக்கு உறுதியாக தெரியவில்லை. இறந்து விட்டது போன்றே உணர்ந்தேன். ஆனால், என்னால் பார்க்கவும், கேட்கவும் முடிந்தது. உணர்வும் இருந்தது.

கடைசியாக ஒரு குண்டு வந்து என் மீது தாக்கி, நான் கொல்லப்படும் வரை காத்திருந்தேன். ஆனால், அது நடைபெறவில்லை என கூறுகிறார். அவர் ரத்தம் வழிய தோழிகளின் உடல்களுடன் 4 மணிநேரம் வரை கிடந்திருக்கிறார்.

அப்போது பயங்கரவாதிகள் உடல்களை பரிசோதனை செய்திருக்கின்றனர். காப்பாற்றப்படுவதற்காக காத்திருந்தபோது, ராமின் தோழி சஹார் என்பவர் மூச்சு விடுவது தெரிய வந்தது. இதனால், அவர் உயிருடன் இருக்கிறார் என ராமுக்கு தெரிந்தது. தாக்குதலில், சஹார் உயிர் தப்பி விட்டார்.

சஹார், அவருடைய சீருடையை கழற்றி, ராமுக்கு முதலுதவி செய்திருக்கிறார். இதுபற்றி ராம் கூறும்போது, என்னுடைய முழு உடலையும் நான் தொட்டு பார்க்க தொடங்கினேன்.

எந்த பகுதியில் சுடப்பட்டு உள்ளது. ரத்தம் எந்தளவுக்கு வெளியேறுகிறது. எவ்வளவு நேரம் உயிர் வாழ்வேன் என்று தெரிந்து கொள்ள முயன்றேன். இறந்து கொண்டிருப்பது போன்று நான் உணர்ந்தேன்.

4 மணிநேரம் இறந்தது போன்று நடித்து கொண்டிருந்தேன். அதிக வலியாக இருந்தது. எதுவும் பேச முடியவில்லை. என்னை காப்பாற்றி சொரோகா மருத்துவமனையில் சேர்த்தனர். செல்லும் வழியில் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு உயிருடன் இருக்கிறேன் என கூறினேன் என்று கூறியுள்ளார்.

ஈடன் ராமுக்கு உயிர்காக்கும் 2 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 3 நாட்கள் வென்டிலேசனில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட ராம், விரைவாக குணமடைந்து விட்டார். மீண்டும் நடக்க தொடங்கியிருக்கிறார்.

அவருடைய தைரியத்திற்காக இஸ்ரேல் அதிபர் ஹெர்ஜாக்கிடம் இருந்து விருது ஒன்றும் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்