< Back
உலக செய்திகள்
வலுக்கும் ஹிஜாப் போராட்டம்: இணையத்தை முடக்கிய ஈரான் - உதவிக்கரம் நீட்டிய எலான் மஸ்க்..!
உலக செய்திகள்

வலுக்கும் ஹிஜாப் போராட்டம்: இணையத்தை முடக்கிய ஈரான் - உதவிக்கரம் நீட்டிய எலான் மஸ்க்..!

தினத்தந்தி
|
26 Sept 2022 12:12 AM IST

போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தெஹ்ரான்,

ஈரானில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13-ம் தேதி போலீசார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவத்தொடங்கியது.

ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை, போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டம் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்கைப், பேஸ்புக், டுவிட்டர், டிக்-டாக் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இணையதளங்கள் முடக்கப்பட்ட நிலையில், உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், ஈரானுக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்க முன்வந்துள்ளார். ஈரான் அரசு மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள போதும், மக்கள் இணைய சேவையைப் பயன்படுத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது... தொடர்ந்து தனது இணையசேவை செயற்கைக்கோளான ஸ்டார்லிங்க் சேவையை ஈரானியர்கள் பயன்படுத்தும் வகையில் எலான் மஸ்க்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்