< Back
உலக செய்திகள்
கொடூரத்தின் உச்சம்; உயிரிழந்த உடல்களில் வெடிகுண்டுகள்... ஹமாஸ் அமைப்பின் தந்திரம் வெளியீடு
உலக செய்திகள்

கொடூரத்தின் உச்சம்; உயிரிழந்த உடல்களில் வெடிகுண்டுகள்... ஹமாஸ் அமைப்பின் தந்திரம் வெளியீடு

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 PM IST

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சிலரது உடல்களில் வெடிகுண்டுகளை இணைத்து விட்டு தப்பிய விவரம் வெளிவந்துள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.

210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 17-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.

இதில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் (ஐ.டி.எப்.) யஹலோம் பிரிவு, கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய பின்னர், மீதமுள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

எனினும், இந்த பணி ஆபத்து மற்றும் மிக கடினம் நிறைந்துள்ளது என்று இந்த சிறப்பு படைப்பிரிவானது, தெரிவிக்கின்றது. ஏனெனில், இஸ்ரேலிய எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் யாரும் உள்ளனரா? என்று பாதுகாப்பாக செல்ல வேண்டி உள்ளது.

வெடிக்காத வெடிகுண்டுகள் மீதம் உள்ளனவா? என்றும் அவற்றை தூய்மைப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தும் பணியும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிறது.

இதில், உயிரிழந்த சில உடல்களில் வெடிகுண்டுகள் இணைக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய சில புகைப்படங்களை ஐ.டி.எப். வெளியிட்டிருக்கிறது.

அவற்றில், குழந்தைகள் பள்ளிக்கு போகும்போது கொண்டு செல்ல கூடிய பை ஒன்று வயல்வெளியில் கிடக்கிறது. ஆனால், அதில், ரிமோட் உதவியுடன் வெடிக்க கூடிய 7 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.

இதனை எப்படியும் யாரேனும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், உள்நோக்கத்துடன் ஹமாஸ் அமைப்பு தேர்வு செய்துள்ளது. போரில் பல தந்திரங்களில் ஒன்றாக இதனை அந்த அமைப்பு பயன்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்