< Back
உலக செய்திகள்
காதலியை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற ஹமாஸ் அமைப்பு...!! நம்பிக்கையோடு காத்திருக்கும் காதலர்
உலக செய்திகள்

காதலியை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற ஹமாஸ் அமைப்பு...!! நம்பிக்கையோடு காத்திருக்கும் காதலர்

தினத்தந்தி
|
22 Oct 2023 8:24 AM GMT

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆலனின் காதலியை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற வீடியோ பரபரப்பாக வைரலானது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி தரை, கடல் மற்றும் வான்வழியே தாக்குதலை தொடுத்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பலரை பணய கைதிகளாகவும் பிடித்து சென்றது. இந்த தாக்குதலில் இசை திருவிழாவில் கலந்து கொண்ட 260 பேர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி சென்றனர். 210 பேரை சிறை பிடித்து சென்றனர்.

அவர்களில் இன்பார் ஹைமன் (வயது 27) என்பவரும் ஒருவர். இஸ்ரேலின் ஹைபா நகரை சேர்ந்த அவர் ஓவிய மாணவியாவார். இசை திருவிழாவின்போது, தன்னார்வலராக கலந்து கொண்ட அவர், ஹமாஸ் தாக்குதலின்போது மற்றவர்களோடு சேர்ந்து தப்பி செல்ல முயன்றார்.

கொடூர தாக்குதல் தொடங்கியதும், பின்னணியில் துப்பாக்கி சூடு சத்தத்துடன் மக்கள் அலறியடித்தபடி, வயல்வெளி பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை நோக்கி ஓடினர். ஆனால், ஹைமனை பயங்கரவாதிகள் பிடித்து விட்டனர். அவருடைய 2 நண்பர்கள் இதில் தப்பி விட்டனர்.

இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது. அதில், மோட்டார் பைக்குகளில் வந்த பயங்கரவாதிகள் அவரை பிடித்து இழுத்தபடி சென்றனர். இந்த வீடியோ வைரலானதும், காதலியை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய காதலர் நோவாம் ஆலன் (வயது 24) அதிகாரிகளை விடாமல் சந்தித்து பேசி வருகிறார்.

ஆலன் கூறும்போது, அவர்களிடம் நான் கேட்பதெல்லாம், இரக்கம் காட்டுங்கள். அவளை உயிருடன் வைத்திருங்கள். அதிகம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும். பணய கைதிகளுக்கு உணவு, நீர் மற்றும் மருந்துகளை கொடுங்கள். கவனம் செலுத்துங்கள் என வேண்டுகோளாக கூறியுள்ளார்.

பணய கைதிகள் மீட்புக்கே இஸ்ரேல், இங்கிலாந்து அரசுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதுவே மிக அவசியம். எந்தவொரு ராணுவ நடவடிக்கை அல்லது தரைவழி தாக்குதலுக்கு முன்பும் அவர்கள் திரும்ப வேண்டும் என்று ஆலன் கேட்டு கொண்டுள்ளார்.

நிச்சயம் அவள் திரும்பி வருவாள். ஆனால், முடிந்தவரை நாமும் அவள் திரும்புவதற்கான எல்லா விசயங்களையும் செய்ய வேண்டும் என்று ஆலன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்