ஜப்பானில் இளைஞர்களை மது குடிக்க ஊக்குவிக்கும் அரசு... காரணம் என்ன?
|ஜப்பானில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அதிக அளவில் மது குடிக்கும்படி அரசே ஊக்குவித்து அதற்கான பிரசாரம் ஒன்றை தொடங்கி உள்ளது.
டோக்கியோ,
ஜப்பானில் கொரோனா பெருந்தொற்றால், கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இதனால், அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு தேசிய வரி கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020-ம் ஆண்டில் குடிமக்கள் குறைந்த அளவே மதுபானம் குடித்துள்ளனர் என தெரிவித்து உள்ளது. கடந்த 1995-ம் ஆண்டில் குடிமக்கள் குடித்த மதுபானம் நூறு லிட்டர் என்ற அளவில் இருந்தது.
ஆனால், இது 75 லிட்டராக குறைந்துள்ளது என ஒப்பீட்டு அளவையும் தெரிவித்து உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், ஜப்பானில் மக்கள் தொகை விகிதமும் குறைந்துள்ளது. இதனால், மக்கள் தொகையை அதிகரிக்க செய்யும் நோக்குடனும் மற்றும் ஜப்பானின் பொருளாதாரம் மேம்படுவதற்காகவும் அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
இதற்காக சேக் விவா என்ற பெயரில் ஜப்பானின் தேசிய வரி கழகம் பிரசாரம் ஒன்றை தொடங்கி உள்ளது. மதுபானங்களின் தேவையை அதிகரிக்க உதவி புரியும் யுக்திகளுடன் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வரும்படியும் அந்த கழகம் தனது நாட்டு குடிமக்களை கேட்டு கொண்டுள்ளது.
இதன்படி போட்டி ஒன்று நடத்தப்படும். இதில், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் பங்கேற்கலாம். அவர்கள் மதுபானம் குடிப்பதற்கான வரவேற்கத்தக்க புதிய யுக்திகளை பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சேக், சோச்சு, பீர், விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் தேவையை அதிகரிக்க செய்வது மற்றும் வெவ்வேறு சுவைகளை பற்றியும், புதிய வாழ்வியல் வழிகளை பற்றியும் தெரிவிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவோர் செப்டம்பர் 27-ந்தேதி தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கு அடுத்த சுற்று அக்டோபரில் நடைபெறும். அதன் முடிவுகள் டோக்கியோ நகரில் வருகிற நவம்பர் 10-ந்தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.