சூடானில் நிலத்தகராறால் எற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு..!
|சூடானில் நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது.
புளூ நைல்,
சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில், ஹவுசா பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடந்த வாரம் மோதிக் கொண்டனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 170 பேர் வரை கொல்லப்பட்டனர் என தகவல் வெளியானது.
இந்நிலையில், சூடான் நிலத்தகராறில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 220 ஆக உயர்ந்துள்ளது. பலர் வன்முறையில் காயமடைந்துள்ளனர் என அல்-மஹி பகுதியில் உள்ள மருத்துவமனையின் தலைவரான அப்பாஸ் மவுசா உறுதிப்படுத்தி உள்ளார். இதையடுத்து, கவர்னர் அஹ்மத் அல்-ஓம்டா பாடி, புளூ நைல் மாகாணத்தில் 30 நாட்களுக்கு அவசரகால நிலையை பிறப்பித்து உத்தரவிட்டார்.