பிலிப்பைன்சில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக உயர்வு
|இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 29 வரை டெங்கு காய்ச்சலால் 233 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மணிலா,
பிலிப்பைன்சில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. அங்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 29 வரையிலான காலகட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 233 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை உதவி செயலாளர் ஆல்பர்ட் டோமிங்கோ கூறுகையில், ஜனவரி முதல் ஜூன் 29 வரையிலான காலகட்டத்தில் 90,119 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 19 சதவீதம் அதிகம் என்றும் கூறினார்.
மேலும் நாட்டின் ஏழு பிராந்தியங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மழையால் ஏற்படும் நீர் தேங்கல் காரணமாக டெங்கு பரப்பும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு அதிகரிப்பதால் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது என்று ஆல்பர்ட் டோமிங்கோ கூறினார்.
இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் சுகாதாரத்துறை செயலாளர் தியோடோரோ ஹெர்போசா கூறுகையில், நீர் தேங்குவதை அகற்றுவதன் மூலம் டெங்கு பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்க இடங்களை அழிக்கலாம். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் ஆரம்பகால அறிகுறிகளை கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானது என்றார்.