அரிய வகை தனிமங்கள் சந்தையில் உயர பறக்கும் சீன கொடி; உலக நாடுகள் கலக்கம்
|அரிய வகை தனிமங்கள் சந்தையில், அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளன.
ஹாங்காங்,
உலகம் முழுவதும் நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. அவற்றை பயன்படுத்த உதவும் மின்னணு சாதனங்களும் பெருகி விட்டன. இவற்றில் தொலைக்காட்சி, அவற்றின் திரை, ஸ்மார்ட்போன், மைக்ரோபோன், கணினியின் வன்பொருட்கள், மின்சார கார்கள், ஒலிப்பெருக்கிகள், சூரிய தகடுகள் என்று பல்வேறு பொருட்கள் உபயோகத்தில் உள்ளன.
இவற்றின் உற்பத்தியில் அடிப்படை தேவையாக, நிலையான காந்தங்களின் பயன்பாடும் உள்ளன. இந்த காந்தங்கள் மற்றும் அரிய வகை தனிமங்களுக்கு என்று சந்தையில் அதிக தேவை காணப்படுகிறது.
தொடக்கத்தில் இதுபோன்ற தனிம பொருட்களை அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் இருந்து சீனா இறக்குமதி செய்து வந்தது. ஆனால், இன்று அமெரிக்காவே வியக்கும் வகையில், அவற்றின் உற்பத்தி சந்தையில் அந்நாட்டை பின்னுக்கு தள்ளி விட்டு சீனா ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.
இந்த அரிய வகை தனிமங்களாக யிட்ரியம், ஸ்கேண்டியம் மற்றும் 15 லேந்தனைடு வகை தனிமங்கள் என மொத்தம் 17 தாதுக்கள் உள்ளன. இவற்றுள் காணப்படும் காந்தப்புலம் மற்றும் மின்சாரம் கடத்தும் பண்புகளால் அவை காந்தங்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
இவற்றின் உற்பத்தியில் மேற்கத்திய நாடுகள் பின்தங்கி உள்ளன. ஆனால், சீனாவில் இதன் உற்பத்தி அபரிமிதம் என்ற அளவில் உள்ளது.
உலக மயமாக்கலை தொடர்ந்து, 1980 மற்றும் 1990 ஆண்டுகளில் சீனா அதிரடி வளர்ச்சியை அடைந்தது. அரசின் மானியங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறைவான கவனம் செலுத்துவது மற்றும் குறைந்த கூலிக்கு ஆள் கிடைப்பது ஆகியவை சீனாவுக்கு சாதகம் ஏற்படுத்திய அம்சங்கள். இதனால் சுரங்க தொழில் வளர்ச்சி பெற்றது,
சுரங்கங்களில் கிடைக்கும் தனிமங்களை பிரித்து, அவற்றை தூளாக்கும் ஆலைக்கு அவை கொண்டு செல்லப்படுகின்றன. இதன்படி, 2021-ம் ஆண்டில் சர்வதேச அளவில் அரிய வகை தனிமங்களின் சந்தையில் 61 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தன. இதன்படி, 1.68 லட்சம் டன்கள் உற்பத்தியாகி இருந்தன.
இது அமெரிக்கா போன்ற நாடுகளை கலக்கமடைய செய்துள்ளது. இதுவே இப்படி என்றால், உலகின் அரிய வகை காந்த உற்பத்தியில் சீனா 85 சதவீதம் என்ற அளவில் முன்னணியில் உள்ளது.
உலக அளவில் அரிய வகை தனிம இருப்பில் சீனா 440 லட்சம் டன் பொருட்களை கொண்டுள்ளது என திட்ட மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கடுத்த அளவில் உள்ள வியட்னாம், பிரேசில் மற்றும் இந்தியா ஆகியன சீனாவுடன் ஒப்பிடும்போது பாதியளவை கொண்டுள்ளன. அமெரிக்காவில் 18 லட்சம் டன்களே உள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டில் மொத்த அரிய வகை தனிம உற்பத்தியில், சீனாவுடன் ஒப்பிடும்போது 4-ல் ஒரு பங்கும், உலக அளவிலான மொத்த விகிதத்தில் 15.5 சதவீதமும் அமெரிக்கா கொண்டுள்ளது. இதனால், இந்த துறை சார்ந்த பொருட்களுக்கு தனித்து நிற்கும் திறனில் இருந்து அமெரிக்கா விலகி இருப்பதுடன், தனது எதிரியான சீனாவையே அதிகம் சார்ந்து இருக்க வேண்டிய மறைமுக சூழலும் காணப்படுகிறது.
நிலைமை இப்படி இருக்கும்போது, கொரோனாவுக்கு பெருந்தொற்று பரவலுக்கு முந்தின காலத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஒருபுறம் காணப்பட்ட பொருளாதார பனிப்போர் என்பது உண்மை நிலையை உலகுக்கு எடுத்து காட்டுகிறது.