< Back
உலக செய்திகள்
ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு! இன்று விண்ணில் ஏவும் முயற்சி நிறுத்தம் - நாசா அறிவிப்பு
உலக செய்திகள்

ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு! இன்று விண்ணில் ஏவும் முயற்சி நிறுத்தம் - நாசா அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Aug 2022 1:04 PM GMT

இந்த பிரமாண்ட ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

வாஷிங்டன்,

நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது.

இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது.இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான ஓரியன் விண்கலத்தை சுமந்து செல்கிறது. இன்று கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுகிறது.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஆர்ட்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைளை பற்றி விவாதிக்க உள்ளனர்.

ஆர்ட்டெமிஸ்-1 விண்ணில் பாய்வதை காண, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு ஏமாற்றமளித்துள்ளது.

நேற்றிரவு, ராக்கெட்டில் மூன்று மில்லியன் லிட்டருக்கும் அதிகமான அதி-குளிர் திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிரப்பும் பணி, மோசமான வானிலையால் மின்னல் எற்பட்டதால் அதிக ஆபத்து காரணமாக சிறிது நேரம் தாமதமானது. பின்னர் ஹைட்ரஜன் நிரப்பும் பணி தொடர்ந்தது.

மேலும், அதிகாலை 03:00 மணியளவில், மற்றொரு சிக்கல் வெளிப்பட்டது. பிரதான கட்ட ஹைட்ரஜன் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டது, அதன்பின் அது சரிசெய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக ராக்கெட்டின் என்ஜினில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இன்று விண்ணில் ஏவப்பட தயாராக இருந்த ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் எஸ்எல்எஸ் ராக்கெட்டின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

அதேவேளையில், செப்டம்பர் 2ல், ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் எனத் தெரிகிறது.மிகுந்த பொருட்செலவில் உருவான நாசாவின் கனவுத்திட்டமான ஆர்ட்டெமிஸ்-1 ஒரு முதற்கட்ட சோதனை முயற்சி என்பதால் அதில் பல கோளாறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்