< Back
உலக செய்திகள்
சீனாவில் சார்ஸ் நோய் பரவலை பகிரங்கப்படுத்திய ராணுவ மருத்துவர்... நிம்மோனியாவுக்கு பலி
உலக செய்திகள்

சீனாவில் சார்ஸ் நோய் பரவலை பகிரங்கப்படுத்திய ராணுவ மருத்துவர்... நிம்மோனியாவுக்கு பலி

தினத்தந்தி
|
14 March 2023 8:25 PM IST

சார்ஸ் நோய் பற்றி பேசி, வீட்டு காவலில் வைக்கப்பட்ட சீன ராணுவ மருத்துவர் நிம்மோனியாவுக்கு பலியாகி உள்ளார்.


பீஜிங்,


சீன ராணுவ மருத்துவரான ஜியாங் யான்யாங் தனது 91-வது வயதில் பீஜிங் நகரத்தில் வைத்து நிம்மோனியா பாதிப்பினால் உயிரிழந்து உள்ளார் என மனித உரிமைகள் ஆர்வலரான ஹூ ஜியா தெரிவித்து உள்ளார்.

இதனை சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற செய்தி நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது.

2003-ம் ஆண்டு சார்ஸ் நோய் பரவியபோது, அதனை பற்றிய முழு விவரங்களை ஜியாங் வெளியிட்டார். அரசியல் சார்ந்த அவரது பேச்சுகளின் எதிரொலியாக, பின்னர் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.

சீனாவில், ஜியாங் மரணம் பற்றிய தகவல் மற்றும் அவரது பெயர் கூட தணிக்கை செய்யப்பட்டு இருந்தது. அவரது வாழ்வின் இறுதி நாளில் கூட அரசியல் சார்ந்த முக்கிய நபராக அவர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு வந்து உள்ளார்.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த அவர், பீஜிங் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக இருந்து உள்ளார்.

அப்போது, மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் நடந்தன. ராணுவம் அவர்களை கட்டுப்படுத்த போராடியது. இதில், டையனம்மன் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் குடிமக்கள் என கூறப்படுகிறது. அப்போது, ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பவராக செயல்பட்டு உள்ளார்.

2003-ம் ஆண்டில் சார்ஸ் நோய் பரவியபோது, ஆளும் கம்யூனிஸ்டு கட்சி நோய் பரவல் பற்றிய தகவலை வெளிவராமல் பார்த்து கொள்ளும் பணியை செய்தது. எனினும், ஜியாங் 800 வார்த்தைகள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதினார்.

சீன சுகாதார மந்திரி அறிவித்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான சார்ஸ் நோயாளிகள் இருந்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சீன அரசு சேனலான சி.சி.டி.வி. மற்றும் ஹாங்காங்கின் பீனிக்ஸ் சேனலுக்கு இந்த கடிதங்களை இ-மெயில் வழியே அனுப்பி விட்டார். ஆனால், அவர்கள் அதனை தவிர்த்து விட்டனர்.

இதன்பின்னர், இந்த கடிதம் மேற்கத்திய ஊடகங்களுக்கு கசிந்தது. இதனால், உண்மையான நோய் பரவல் விவரம் தெரிந்ததுடன், அதனை சீன அதிகாரிகள் மறைக்க முயற்சித்ததும் தெரிந்தது.

அந்த கடிதத்தில், பின்லாந்து நாட்டுக்கான ஐ.நா. ஊழியர் மரணம் மற்றும் பிரபல மருத்துவரான ஜாங் நான்ஷான் கூறிய தகவல்களையும் உள்ளடக்கி இருந்தது. இதனால், அரசின் ஒடுக்குமுறை நீங்கியதுடன், சுகாதார மந்திரி மற்றும் பீஜிங் நகர மேயர் பதவி விலகவும் வழிவகுத்தது.

பிற நாடுகளில் முன்பே சார்ஸ் பரவல் தொடங்கியிருந்த சூழலில், ஒரு கடிதத்தின் தகவலால் சீனாவில் மாற்றங்கள் ஏற்பட்டு, கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நோய் பரவல் கட்டுப்படுத்தவும் உதவியது.

29 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுத்திய சார்ஸ் நோய்க்கு அப்போது 774 பேர் உயிரிழந்தனர். விளைவுகளை பற்றிய சிந்தனையே இல்லாமல் செயல்பட்ட அவரது அந்த கடிதம் பல உயிர்களை காப்பாற்றியது.

பொதுமக்களில் நோயாளிக்கே முன்னுரிமை என்ற எண்ணம் கொண்டவர் ஜியாங் என்று ஹூ தெரிவித்து உள்ளார்.

எனினும், இதன்பின்னர் மேஜர் ஜெனரலாக இருந்து ஜியாங் ஓய்வு பெற்ற பின்னர், பேட்டியளிக்க தனக்கு பாதுகாப்பு அமைச்சக அனுமதி கிடைக்கவில்லை என கூறினார். சீனாவில், 2004-ம் ஆண்டில் ஜியாங், அவரது மனைவி வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

அவருக்கு பிலிப்பைன்ஸ் மகசேசே விருது வழங்கி கவுரவித்தது. எனினும், அதனை அவரது மகளே சென்று பெற்று கொண்டார்.

சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு உலகுக்கு தெரிய வந்தபோதும், ஜியாங்கின் அனுபவம் போல் பல மருத்துவர்கள், விஞ்ஞானிகளுக்கும் சீனாவில் ஏற்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்