இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்த இந்தியாவுக்கு நன்றி - ரணில் விக்ரமசிங்கே உருக்கம்
|உரிய காலத்தில் பொருளாதார உதவி வழங்கி, இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்த இந்தியாவுக்கு நன்றி என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உருக்கமாக கூறினார்.
கொழும்பு,
இலங்கை நாடாளுமன்றம் 7 நாள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் கூடியது. புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்ற வாயிலில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனா, நாடாளுமன்ற செயலாளர் தம்மிகா தசநாயகா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், நாடாளுமன்றத்தில் இலங்கை அரசின் கொள்கை அறிக்கையை வெளியிட்டு ரணில் விக்ரமசிங்கே பேசினார். அவர் பேசியதாவது:-
இலங்கை பொருளாதாரத்தை நவீனப்படுத்த வேண்டும். இனிமேலும் வெளிநாட்டு கடன்களை சார்ந்து இருக்கக்கூடாது. கடன் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு காணவேண்டும்.
வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை எதிர்த்ததுதான் நமது இன்றைய சிக்கலுக்கு காரணம். திரிகோணமலையில் எண்ணெய் வயல் வளாகத்தை இந்தியாவுடன் சேர்ந்து மேம்படுத்த திட்டமிட்டோம்.
ஆனால், அது இந்தியாவுக்கு இலங்கையை விற்பதுபோல் ஆகிவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. அதை அனுமதித்து இருந்தால், இன்று எரிபொருளுக்காக பல நாட்கள் வரிசையில் நிற்கும் அவலம் நேர்ந்திருக்காது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான தேசிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நிதியத்துடன் (ஐ.எம்.எப்.) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கடன் மறுசீரமைப்பு திட்டம் தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.
அதை சர்வதேச நிதியத்திடம் சமர்ப்பிப்போம். அதுபோல், பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்போம்.
நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க வேண்டும். அதற்கு அனைத்து கட்சி அரசு அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் என்னுடன் கைகோர்க்க வேண்டும். நாட்டை வழிநடத்த எல்லா கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.
இந்த சிக்கலான நேரத்தில் இந்தியா அளித்த உதவியை குறிப்பிட விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, உரிய காலத்தில் பொருளாதார உதவி வழங்கி, இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்தது. அதனால், இலங்கை அரசு சார்பிலும், என் சார்பிலும் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எரிபொருள் தட்டுப்பாடு இந்த ஆண்டு இறுதிவரை நீடிக்கும். இருப்பினும், தற்போது பிரச்சினை குறைந்துள்ளது. அனைவருக்கும் நியாயமான அளவுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.