< Back
உலக செய்திகள்
தாய்லாந்து:  கல்வி சுற்றுலா சென்றபோது தீப்பிடித்து எரிந்த பஸ்; 25 மாணவர்கள் பலி என அச்சம்
உலக செய்திகள்

தாய்லாந்து: கல்வி சுற்றுலா சென்றபோது தீப்பிடித்து எரிந்த பஸ்; 25 மாணவர்கள் பலி என அச்சம்

தினத்தந்தி
|
1 Oct 2024 3:06 PM IST

தாய்லாந்து நாட்டில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. வடக்கே உத்தை தனி மாகாணத்தில் உள்ள பள்ளியில் இருந்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 44 பேர் இருந்துள்ளனர். கல்வி சுற்றுலாவுக்காக அவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். எனினும், அவர்கள் சென்று சேர வேண்டிய இடம் என்னவென தெரியவில்லை.

இந்த சுற்றுலாவுக்கு மாணவர்களுடன் 6 ஆசிரியர்களும் சென்றுள்ளனர். அந்த பஸ், கு கோட் நகரில் ஜீர் ரங்சித் என்ற பகுதியருகே பஹோன் யோதின் சாலையில் சென்றபோது, திடீரென தீப்பிடித்தது. இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில் பலர் பலத்த காயமடைந்து உள்ளனர்.

16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 25 மாணவர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என போக்குவரத்து மந்திரி சூரியா கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷினவத்ரா இரங்கல் தெரிவித்து கொண்டார்.

மேலும் செய்திகள்