பள்ளிகள், மருத்துவமனைகளில் பதுங்கிய பயங்கரவாதிகள்; அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
|போர் ஹெலிகாப்டர் உதவியுடன் இஸ்ரேல் படையினர் பாதுகாப்பாக சென்று, ஏவுகணை தாக்குதல் தொடுத்தவர்களை வீழ்த்தினர்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் பாதுகாப்பு படையின் வீரர்கள் காசா பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை அடையாளம் கண்டனர். இதனை தொடர்ந்து வான்வழியே, அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், மசூதியை விட்டு தப்பி சுரங்க பகுதிக்குள் செல்ல முயன்ற அவர்களை வான்வழி தாக்குதல் நடத்தி அழித்தனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், மருத்துவமனை உள்பட வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு, பீரங்கியை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணைகளை செலுத்தினர்.
எனினும், போர் ஹெலிகாப்டர் ஒன்றின் உதவியுடன் இஸ்ரேல் படையினர் பாதுகாப்பாக சென்று, ஏவுகணை தாக்குதல் தொடுத்தவர்களை வீழ்த்தினர்.
இதேபோன்று, ராக்கெட் வீச்சு மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்திய பள்ளி ஒன்றையும் தகர்த்தனர். அந்த பள்ளியில் இருந்த ராக்கெட் ஏவும் குழிகள், பல்வேறு ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதிகளை இஸ்ரேல் படையினர் தாக்கி அழித்தனர்.
இவை தவிர, பீரங்கி குண்டுகள் மற்றும் பீரங்கியை அழிக்கும் ஏவுகணைகளுக்கான ஏவு தளங்கள் ஆகியவையும் தாக்குதலில் அழிக்கப்பட்டன.