'பயங்கரவாத ஆதரவு பேச்சு'; ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்களுக்கு இஸ்ரேல் கண்டனம்
|அந்த நாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதர்கள் அவர்களுக்கு எதிராக அதிகாரப்பூர்வ கண்டனம் தெரிவிக்கும்படி கோஹென் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. 49 நாள் போரை அடுத்து பணய கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே 4 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பணய கைதிகள் 13 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை முன்னிட்டு, எகிப்தின் ரபா எல்லை பகுதியில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ ஆகியோர் கூட்டாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.
இதில் பேசிய சான்செஸ், சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைவரும் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அதுபோன்று இணையவில்லை என்றால், ஸ்பெயின் தனது சொந்த முடிவை எடுக்கும் என்று பேசினார்.
இதனை தொடர்ந்து பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ, பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவது பற்றி எதுவும் கூறாதபோதும், அவர் பேசும்போது, வன்முறையை நிறுத்த வேண்டும்.
பணய கைதிகளை விடுவிக்க வேண்டும். உதவி பொருட்கள் காசாவுக்கு சென்று சேர செய்ய வேண்டும். முதலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என பேசினார்.
நிரந்தர போர்நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதற்கான தேவை மற்றும் நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார். பொதுமக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். நிறைய மக்கள் உயிரிழந்து விட்டனர்.
காசாவை அழிப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது. ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது என்பதனையும் நாங்கள் ஏற்க முடியாது என்று அவர் பேசினார்.
ஸ்பெயின் மற்றும் பெல்ஜியத்தின் பிரதமர்களின் இந்த பேச்சுக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாலஸ்தீனியர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி எங்களுடைய குடிமக்களை ஹமாஸ் அழித்தனர். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை செய்த ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக முழு பொறுப்பையும் அவர்கள் சுமத்தவில்லை என்று இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இதுபற்றி இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹென் கூறும்போது, பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்களின் பொய்யான பேச்சுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம் என்று கூறியுள்ளார். அவர்களின் பேச்சுகளுக்காக, அந்த நாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதர்கள் அவர்களுக்கு எதிராக அதிகாரப்பூர்வ கண்டனம் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.