கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து பயங்கரவாத செயல் - ஆஸ்திரேலியா போலீசார்
|ஆஸ்திரேலியாவில் பாதிரியார் மீது நடந்த தாக்குதல் முன்பே திட்டமிடப்பட்டது என்று நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆணையாளர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.
சிட்னி,
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் வேக்லே புறநகர் பகுதியில், கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்டு என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இதில், மர்மாரி இம்மானுவேல் என்ற பாதிரியார் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அவரை நோக்கி முன்னேறினார்.
அவர் திடீரென, கத்தியால் பாதிரியாரின் நெஞ்சில் குத்தினார். இதனை எதிர்பாராத அவர், கீழே சரிந்து விழுந்து விட்டார். இதனை பார்த்து ஆலயத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள், முதியவர்கள் என பலரும் நிறைந்த அந்த ஆலயத்தில் இருந்தவர்கள் அலறியபடி, கூச்சல் போட்டனர். ஒரு சிலர் இதனை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நியூ சவுத் வேல்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் பொதுமக்கள் அந்நபரை சூழ்ந்து கொண்டு, அவரை பிடித்து வைத்திருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், 16 வயது சிறுவன் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளான் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் முன்பே திட்டமிடப்பட்டது என நம்பப்படுகிறது என்று நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆணையாளர் கேரன் வெப் செய்தியாளர்களிடம் இன்று கூறினார். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின்போது, பூசாரி ஒருவரும் கத்தியால் குத்தப்பட்டார். ஆஸ்திரேலியாவில் 2 நாட்களுக்கு முன் சிட்னி நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த சூழலில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நேரலையாக ஒளிபரப்பானது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.