இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு
|சுனாமி எச்சரிக்கையால் அச்சமடைந்த மக்கள் அவசரஅவசரமாக உயரமான இடங்களை நோக்கி விரைந்தனர்.
ஐகார்த்தா,
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கடற்கரை நகரமான தெலுக் தலம் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவனாது. மேலும் இந்த பயங்கர நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் வடக்கு சுமத்ரா மற்றும் மேற்கு சுமத்ரா மாகாணங்களை கடுமையாக உலுக்கியது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் கடும் பீதியடைந்த மக்கள் கூச்சலிட்டபடியே கட்டிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
இதற்கிடையில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்க வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
அதோடு கடற்கரை ஓரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். சுனாமி எச்சரிக்கையால் அச்சமடைந்த மக்கள் அவசரஅவசரமாக உயரமான இடங்களை நோக்கி விரைந்தனர்.
இதனிடையே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட 2 மணி நேரத்துக்கு பிறகு, அது திரும்பப்பெறப்பட்டது. அதன் பிறகே மக்கள் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர்.
இந்த நிலநடுக்கத்தால் அங்கு உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ உடனடி தகவல்கள் இல்லை. அதேபோல் பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.