சீனாவில் பயங்கர நிலநடுக்கம்; கருத்து வேறுபாடுகளுக்கு இடையே உதவ முன்வந்த தைவான்
|சீனாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தைவான் தயாராக உள்ளது என சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.
தைபே,
வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காய் ஆகிய மாகாணங்களில் நேற்று ரிக்டர் 6.2 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. நள்ளிரவு நேரம் என்பதால் வீட்டுக்குள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். எனவே உடனடியாக வெளியேற முடியாததால் ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இதனை தொடர்ந்து சுமார் 10 முறை பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிர்வினை உணர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் அங்கு கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
எனினும் இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நில நடுக்கத்தால் பல இடங்களில் சாலைகள் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு உதவ, தைவான் முன்வந்துள்ளது. இது தொடர்பாக தைவான் அதிபர் சாய் இங்-வென், தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நிலநடுக்கத்தில் தங்கள் குடும்பத்தினரை இழந்து வாடும் சீனர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள அனைவருக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என நாங்கள் நம்புகிறோம். கடினமான இயற்கை பேரிடர் மீட்பு பணியில் சீனாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தைவான் தயாராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
சுயாட்சி பெற்ற நாடாக தன்னை தைவான் அறிவித்தாலும், சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், சீனா தனது உரிமையை நிலைநாட்ட தைவானின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.