நிதி நடவடிக்கை பணிக்குழுவில் இருந்து ரஷியா தற்காலிக தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு
|உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக நிதி நடவடிக்கை பணிக்குழுவில் இருந்து ரஷியா தற்காலிகமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ்,
சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, பாரிஸ் நகரை தலைமையகமாகக் கொண்டு 'நிதி நடவடிக்கை பணிக்குழு' (எப்.ஏ.டி.எப்.) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் கண்டறியப்பட்டால் அந்த நாடுகளை கருப்பு பட்டியலில் இந்த அமைப்பு வைத்து கண்காணிக்கும். இந்த பட்டியலில் இடம் பெறும் நாடுகள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகள் பெறுவதற்கும் மற்றும் பன்னாட்டு வணிகம் மேற்கொள்வதற்கும் தடைகள் விதிக்கப்படும்.
இந்த அமைப்பில் ரஷியா உறுப்பினராக இருந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக நிதி நடவடிக்கை பணிக்குழுவில் இருந்து ரஷியா தற்காலிகமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக ரஷியாவின் நடவடிக்கைகள் இருப்பதாகவும், அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் நைஜீரியாவையும் தென் ஆப்பிரிக்காவையும் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்ட நாடுகளின் பட்டியலில் நிதி நடவடிக்கை பணிக்குழு சேர்த்துள்ளது. மேலும் கம்போடியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.