தனியுரிமைக்கு மதிப்பளித்தால் வாட்ஸ் அப்பில் இருந்து விலகி இருங்கள்- டெலிகிராம் நிறுவனர் எச்சரிக்கை
|கடந்த 13 ஆண்டுகளாக வாட்ஸ் அப் ரகசிய கண்காணிப்பு கருவியாக செயல்பட்டு வருவதாக பாவெல் துரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துபாய்.
உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. தொழில் பயன்பாட்டிற்காகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், கல்வி பயன்பாட்டிற்காகவும் வாட்ஸ்அப் செயலியை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
தனது பயனர்களை கவரும் பொருட்டு வாட்ஸ்அப் நிறுவனமும் அவ்வப்போது பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது, வாட்ஸ்அப்பில் புகைப்படம், வீடியோக்கள், மெசேஜ்கள், பைல்கள், லொகேஷன்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். இதற்கிடையில் வாட்ஸ் அப்-பில் தனிநபர் தகவல்களை ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாகவும் சிலர் தரப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ், வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசிகளில் உள்ள அனைத்தையும் ஹேக்கர்கள் முழுமையாக அணுக முடியும் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்தால் வாட்ஸ் அப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அவர் எச்சரித்து உள்ளார்.
வாட்ஸ் அப் குறித்து மேலும் பேசிய பாவெல், "கடந்த 13 ஆண்டுகளாக வாட்ஸ் அப் ரகசிய கண்காணிப்பு கருவியாக செயல்பட்டு வருகிறது. டெலிகிராமை மக்கள் பயன்படுத்துமாறு நான் வற்புறுத்தவில்லை . நீங்கள் விரும்பும் எந்த மெசேஜிங் செயலியையும் பயன்படுத்துங்கள். ஆனால் வாட்ஸ்அப்பில் இருந்து விலகி இருங்கள்" என்றார். டெலிகிராம் நிறுவனரின் இந்த பேச்சு வாட்ஸ் அப் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.