விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினை; சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்
|சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கு மேலும் தாமதம் ஆகலாம் என நாசா மற்றும் போயிங் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்,
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஜூன் 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் ஜூன் 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர்.
இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் பயணத்திட்டம் திடீரென 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
அவர்கள் பயணம் செய்ய வேண்டிய விண்கலமான ஸ்டார்லைனை போயிங் நிறுவனம் வடிவமைத்திருந்தது. இந்த விண்கலத்தில் லேசாக ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக விண்கலத்தை இயக்க முடியாமல், பூமி திரும்பும் பயணம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் திரும்பி வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
இது குறித்து நாசா தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், நாசா மற்றும் போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர் குழுவினர் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள சோதனை மையத்தில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை சரிசெய்வதற்கான மாதிரி சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளாது. இந்த சோதனைகளில் கிடைக்கும் தரவுகள் மூலம் விண்வெளியில் விண்கலத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை சரியாக புரிந்து கொண்டு அதனை விரைவில் சரிசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாசா மற்றும் போயிங் நிறுவன அதிகாரிகள் இணைந்து அளித்த செய்தியாளர் சந்திப்பில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், சோதனைகள் அனைத்தும் முடிந்து பூமிக்கு திரும்ப செப்டம்பர் முதல் வாரம் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.