"எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வரிச்சலுகை" - ஜெர்மனி அரசு திட்டம்
|ஜெர்மனியில் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட மானியங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லின்,
ரஷியா-உக்ரைன் போர் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பல்வேறு நாடுகளில் எரிசக்தி மற்றும் மின்சார பயன்பாட்டின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக ரஷியாவின் எரிபொருள் இறக்குமதியை சார்ந்திருந்த ஐரோப்பிய நாடுகளில், எரிபொருள் விலையேற்றம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜெர்மனியில் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட மானியங்கள் வழங்கப்படும் என அந்நாட்டின் தலைமை மந்திரி ஒலாஃப் ஸ்கோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். தொழில் நிறுவனங்களுக்கு அரசு நிச்சயமாக உதவிகளை வழங்கும் என்று தெரிவித்த அவர், பணியாளர்களுக்கும் தொழில் நிறுவனங்கள் சலுகைகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட புதிய திரவ எரிவாயு முனையங்கள், 2023-ம் ஆண்டு இறுதிக்குள் இறக்குமதிக்கு தயாராகிவிடும் என்றும் குறைவான இயற்கை எரிவாயு விலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய திரவ எரிவாயு முனையங்கள் அமைக்கும் அதே வேளையில் மாற்று எரிசக்தி பயன்பாட்டிற்கு மாறும் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கும் என்று குறிப்பிட்டார். 2022-ம் ஆண்டு இறுதிக்குள் தேவையான அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றி புதிய எரிசக்தி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.