துபாய்: புற்றுநோயாளிகளுக்கு தனது முடியை தானமாக வழங்கிய தமிழக மாணவி
|துபாய் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 6 வயது தமிழக மாணவி அனன்யா சேவியர் தனது முடியை புற்றுநோயாளிகளுக்கு தானமாக வழங்கினார்.
துபாய்:
துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புற்றுநோய் நண்பர்கள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக துபாய் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஈசா எம்.பஸ்தகி தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வரும் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டையை சேர்ந்த 6 வயது மாணவி அனன்யா சேவியர் தனது தலைமுடியை தானமாக வழங்கினார். அவரது முடியை பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஈசா எம்.பஸ்தகி கத்தரிக்கோலால் வெட்டினார்.
அப்போது பல்கலைக்கழக தலைவர் பேசும்போது, ''அனன்யா சேவியரின் முயற்சி பாராட்டத்தக்கது. மிகவும் இளம் வயதில் தனது தலைமுடியை தானமாக வழங்க தன்னார்வத்துடன் வந்துள்ளார். இதுபோல் மற்றவர்களும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட முன்வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அனன்யா தலைமுடியை தானமாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
புற்றுநோய் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட புஸ்ரா, திபோரா பெவன் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உரை ஆற்றினர். மேலும் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.