பருவநிலை மாற்றம் பற்றி மாநாடுகளில் பேசினால் மட்டுமே தீர்வு ஏற்படாது: பிரதமர் மோடி
|பருவநிலை மாற்ற தீர்வுக்கான போராட்டம் ஒவ்வொரு வீட்டின் சாப்பாட்டு மேஜையில் இருந்தும் தொடங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
வாஷிங்டன்,
உலக வங்கியின் 'மக்களின் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றம் ஆனது எப்படி பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும்' என்ற திட்ட தொடக்கத்திற்கான நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில், பிரதமர் மோடி மெய்நிகர் காட்சி வழியே கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறும்போது, நமது மாநாட்டு மேஜைகளில் அமர்ந்து கொண்டு மட்டுமே பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராட முடியாது. அது ஒவ்வொரு வீட்டின் இரவு உணவின்போது சாப்பாட்டு மேஜைகளில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
விவாத மேஜைகளில் இருந்து இரவு உணவு சாப்பாட்டு மேஜைக்கு ஒரு கருத்து கடந்து வரும்போது, அது ஒரு பேரியக்கம் ஆக உருவாகிறது.
ஒவ்வொரு குடும்பம் மற்றும் ஒவ்வொரு தனிநபரும், இதுபற்றிய விழிப்புணர்வுடன் இருக்கும்போது, அவர்கள் தேர்ந்தெடுக்கும் விசயங்களானது இந்த பூமிக்கு உதவுவதுடன், தீர்வு காண்பதற்கான அளவும், வேகமும் கிடைக்க பெறும் என கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்திய மக்கள் நிறைய விசயங்களை செய்து உள்ளனர். பெரிய அளவிலான தூய்மை இயக்கம், கடற்கரை பகுதிகளை தூய்மை செய்வது அல்லது சாலைகளை துப்புரவுப்படுத்துவது உள்ளிட்டவற்றை மக்கள் மேற்கொண்டனர்.
பொது இடங்களில் கழிவுகள் இல்லாதபடி உறுதி செய்து வருகின்றனர் என்று பேசியுள்ளார். இந்தியாவின் பல பகுதிகளில் பாலின விகிதங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் கூட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். எல்.இ.டி. விளக்குகளுக்கு மக்கள் மாறியதும் ஒரு வெற்றியே என அவர் கூறியுள்ளார்.