பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல்
|ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் விமானத்தில் இருந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியது
காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த 2022-ல் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது தலீபான்களுக்கு பயந்து ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். இதற்கிடையே சட்ட விரோதமாக குடியேறிய அகதிகள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறும்படி பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டது.
இதனால் அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக இரு நாடுகளின் உறவிலும் விரிசல் ஏற்பட்டது.
இந்தநிலையில் சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களும் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. இதற்கு தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பே காரணம் என பாகிஸ்தான் அரசாங்கம் கூறுகிறது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசிப் துரானி கூறுகையில், தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பயங்கரவாதிகள் சட்ட விரோதமாக ஆப்கானிஸ்தானுக்குள் குடிபெயர்ந்துள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்தால் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டும்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாத தாக்குதலை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் பாக்டிகா, கோஸ்ட் ஆகிய பயங்கரவாத தளங்களில் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் சரமாரியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக, தலிபான் படைகள் கனரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலிபான் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பாகிஸ்தானின் இந்த ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தலிபான்களின் எல்லைப் படைகள் கனரக ஆயுதங்கள் மூலம் எல்லைக் கோட்டிலுள்ள பாகிஸ்தான் ராணுவ மையங்களை குறிவைத்தன. ஆப்கானிஸ்தானின் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளன, மேலும் எந்த சூழ்நிலையிலும் ராணுவம் எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.