< Back
உலக செய்திகள்
தைவான் அதிபர் தேர்தல்.. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்துவதில் இழுபறி

மக்களிடம் ஆதரவு திரட்டிய தேசியவாத கட்சி வேட்பாளர் ஹோ யு-யி

உலக செய்திகள்

தைவான் அதிபர் தேர்தல்.. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்துவதில் இழுபறி

தினத்தந்தி
|
18 Nov 2023 2:57 PM IST

சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், மேலும் ஆலோசனைகள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைபே:

தைவான் நாட்டில் வரும் ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில், தற்போதைய துணை அதிபர் வில்லியம் லெய் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளான தேசியவாத கட்சி, தைவான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தன. ஆனால், வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது.

இன்று செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், மேலும் ஆலோசனைகள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களான ஹோ யு-யி (தேசியவாத கட்சி), கோ வென்-ஜி (தைவான் மக்கள் கட்சி) ஆகிய இருவருக்கும் பின்னடைவு ஏற்பட்டதால், அவர்களில் ஒருவரை அதிபர் பதவிக்கும், மற்றொருவரை துணை அதிபர் பதவிக்கும் போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டது. மக்கள் செல்வாக்கு மற்றும் உட்கட்சி தேர்தல் முடிவுகளைப் பொருத்து வேட்பாளரை முடிவு செய்ய உள்ளனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில் ஆளுங்கட்சி வேட்பாளர் வில்லியம் லெய் முன்னணியில் உள்ளார். தற்போதைய அதிபர் சாய் இங்-வென் தொடர்ந்து இரண்டு முறை அதிபர் பதவி வகித்ததால், அவர் இனி போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்