< Back
உலக செய்திகள்
தைவான் படையினர் துரத்தியபோது பரிதாபம்.. சீன மீனவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
உலக செய்திகள்

தைவான் படையினர் துரத்தியபோது பரிதாபம்.. சீன மீனவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

தினத்தந்தி
|
17 Feb 2024 3:56 PM IST

தங்கள் கடலோரக் காவல்படை சட்டப்படி செயல்பட்டது என்றும், தவறு எதுவும் செய்யவில்லை என்றும் தைவான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தைபே:

சீனாவைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த புதன்கிழமையன்று கடலில் மீன்பிடிக்கும்போது, அண்டை நாடான தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென் தீவு பகுதியில் சென்றுவிட்டனர். அப்போது அங்கு ரோந்து வந்த தைவான் கடலோர காவல்படையினர், மீனவர்களை பிடிப்பதற்கு முயன்றனர். மீன்பிடி படகை துரத்திக்கொண்டு வந்தனர்.

இதனால் பயந்துபோன மீனவர்கள், தைவான் படையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக படகை திருப்பி வேகமாக செலுத்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களை தைவான் கடலோர காவல் படையினர் மீட்டனர். ஆனால் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட 2 மீனவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தைவான் நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்தது. மீனவர்கள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், வசந்த விழாவின்போது இதுபோன்ற நிகழ்வு தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ளவர்களின் உணர்வுகளை கடுமையாக காயப்படுத்துவதாகவும் சீனாவின் தைவான் விவகாரத்துறை அலுவலகம் கூறியிருக்கிறது.

ஆனால், தங்கள் கடலோரக் காவல்படை சட்டப்படி செயல்பட்டது என்றும், தவறு எதுவும் செய்யவில்லை என்றும் தைவான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கின்மென் பகுதி சீனாவின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இது சீனாவிற்கும் தைவானுக்கும் இடையிலான பதற்றம் நிறைந்த பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்