சீனாவின் மிரட்டலை பொருட்படுத்தாமல் அமெரிக்கா சென்ற தைவான் அதிபர்
|சீனாவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
வாஷிங்டன்,
தென்கிழக்கு சீனாவின் கடற்கரையில் இருந்து 100 மைல் தொலைவில் உள்ள தீவு நாடு தைவான். அமெரிக்காவின் நட்பு நாடாக இது விளங்குகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நடந்த சண்டையைத் தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது.
ஆனால் சீனா, தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கிறது. ஆனால் தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருவதும், சீனாவின் எதிர்ப்பைப் புறந்தள்ளி விட்டு தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி உள்ளிட்ட தலைவர்கள் சென்று வந்ததும் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனாலும் அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சீன ராணுவம் பெரும் போர்ப்பயிற்சிகளை நடத்திக்காட்டியது. இப்படி தைவானை சீனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சீனாவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க மண்ணில் கால் பதித்துள்ளார் தைவான் அதிபர் சாய் இங் வென். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து சாய் இங் வென் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 44 ஆண்டுகளில் தைவான் அதிபர் ஒருவர் அமெரிக்கா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.