தைவான்: விமானத்தில் திடீரென வெடித்து, தீப்பற்றிய மொபைல் போன் சார்ஜரால் பரபரப்பு
|தைவான் நாட்டில் புறப்பட தயாரான விமானத்தில் திடீரென மொபைல் போன் சார்ஜர் வெடித்து, தீப்பற்றி எரிந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
தைபே,
தைவான் நாட்டில் டாவோயுவான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 விமானம் ஒன்று பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தது.
இந்நிலையில், விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் சார்ஜர் ஒன்று திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதனால், மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக விமான பணிப்பெண்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் சார்ஜரின் உரிமையாளர் மற்றும் அவரது அருகே அமர்ந்திருந்த நபர் என 2 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அவர்கள் இருவரையும் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. தீயை அணைத்த பின்னர் விமானத்தில் முழு அளவில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என அதுபற்றி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.