தைவான் கடல் எல்லைக்குள் சீனாவில் இருந்து நுழைந்த 'டிரோன்' விரட்டியடிப்பு
|சீனாவில் இருந்து தகவல் கடல் எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா டிரோன் விமானத்தை தைவான் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைபே,
தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். ஆனால், தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருத்துகிறது. தேவை ஏற்படும் சூழ்நிலையில் தைவான் மீது படையெடுத்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொள்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக இரவு தைவானுக்கு சென்றார். அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசினார். நான்சி பொலேசியின் இந்த பயணம் சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்சி பொலேசியின் பயணத்தை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் 4 முறை தைவானுக்கு சென்றனர். தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்வதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதனை தொடர்ந்து, தென்சீன கடல்பரப்பில் தைவான் நாட்டிற்கும், சீனாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் அமெரிக்காவின் 2 போர் கப்பல்கள் கடந்த 28-ம் தேதி நுழைந்துள்ளன. தைவான் ஜலசந்தி பகுதியில் ஏவுகணை தாங்கி 2 போர் கப்பல்கள் தைவான் கடல்பகுதி வழியாக கடந்து சென்றது. அமெரிக்க போர் கப்பல்கள் தைவான் ஜலசந்தி கடல் பரப்பில் நுழைந்த சம்பவம் சீனாவுடனான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சீனாவில் இருந்து ஆளில்லா டிரோன் விமானம் இன்று தைவான் எல்லைக்குள் நுழைந்துள்ளது. திஅவானின் கின்மென் தீவு பகுதியில் அந்த டிரோன் வந்ததாகவும் அதை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் கண்டறிந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தைவான் ராணுவம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய உடன் அந்த டிரோன் மீண்டும் சீனாவின் கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும், அந்த ஆளில்லா டிரோன் விமானம் ராணுவ பயன்பாட்டிற்கானது அல்ல என்றும் தைவான் ராணுவம் தெரிவித்துள்ளது.