சிரியா: கிளர்ச்சியாளர்கள் மோதலில் 18 பேர் சுட்டுக்கொலை; அமெரிக்க ராணுவத்தினர் குவிப்பு
|சிரியாவில் இருவேறு கிளர்ச்சி கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 18 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
டமாஸ்கஸ்,
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்ததால் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஈராக்கை மையமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தினர் சிரியாவை பாதுகாத்து வருகிறார்கள். இதனால் ஐ.எஸ். இயக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சி இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வழங்கியும், ராணுவ அறிவை பகிர்ந்துகொண்டும் அமெரிக்க ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது.
இதில் அமெரிக்க ராணுவத்தின் உதவியை சிரிய ஜனநாயகப்படை இயக்கமும், நாட்டில் உள்ள அரபு பழங்குடியினரும் அதிக அளவில் பெறுகிறார்கள். இருவேறு கொள்கைகளை கொண்ட இரு கும்பல்களுக்குள் அவ்வப்போது மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்தநிலையில் அரபு பழங்குடியினருடன் பேச்சுவார்த்தை நடத்த சிரிய ஜனநாயகப்படை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பொதுவான இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடக்க ஏற்பாடானது. அதன்படி நாட்டின் வடகிழக்கு நகரான ஹசாகேவில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிரிய ஜனநாயகப்படை சார்பில் அதன் தலைமை தளபதி அகமது கபீல் உள்பட முக்கியமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது கிளர்ச்சி கும்பலுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அகமது கபீல் உள்ளிட்ட நிர்வாகிகளை அரபு பழங்குடிகள் கைது செய்து அழைத்து சென்றனர்.
தகவல் அறிந்த சிரிய ஜனநாயகப்படை ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். கண்ணில் படும் அரபு பழங்குடியினரை தாக்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அரபு பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் எதிர்தரப்பினர் மீது சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். இருபிரிவினரும் துப்பாக்கிகளை கொண்டு கடுமையாக சண்டையிட்டு கொண்டனர்.
இந்த சண்டையில் 2 அப்பாவி பொதுமக்கள் உள்பட 18 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும் 15-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில் 900-க்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ள இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.