சிரியா நிலநடுக்கம்; புதிதாக பிறந்த குழந்தை தாயின் உயிரை காப்பாற்றிய அதிசயம்
|சிரியாவில் நிலநடுக்கத்திற்கு இடையே புதிதாக பிறந்த குழந்தை தனது தாயின் உயிரை காப்பாற்றிய அதிசயம் நடந்து உள்ளது.
அலெப்போ,
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.
சிரியா நாட்டின் வடக்கே அலெப்போ நகரில் கட்டிடம் ஒன்றில் பாத்திமா அகமது என்ற கர்ப்பிணி வசித்து வந்து உள்ளார். நிலநடுக்க நாளில் பாத்திமாவுக்கு பிரசவ வலி வந்து உள்ளது. இதனை தொடர்ந்து அவரை அழைத்து கொண்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
அவருக்கு, பிரசவ வலி ஏற்பட்டு சில மணிநேரத்திற்கு பின்னர் பாத்திமாவுக்கு குழந்தை பிறந்து உள்ளது. இது அவரது 3-வது குழந்தை ஆகும். அந்த குழந்தைக்கு நஜீம் அல்-தீன் முகமது என பெயரிட்டு உள்ளனர்.
இதுபற்றி பாத்திமா உணர்ச்சிவசப்பட்டு கூறும்போது, எனது மகன் என்னுடைய வாழ்வை திரும்ப கொண்டு வந்து சேர்த்து உள்ளான். கடவுள் அவனை பாதுகாக்க வேண்டும். நல்ல வாழ்க்கையை தரவேண்டும் என கூறியுள்ளார்.
அந்த மருத்துவமனையின் மேல்தளத்தில் இருந்த பிரசவ வார்டில் பாத்திமாவை சேர்த்து உள்ளனர். இதற்கு பின்னரும் மற்றொரு பெரிய நிலநடுக்க பாதிப்பு அதே தினத்தில் ஏற்பட்டு உள்ளது.
அவர்கள் இருவராலும் வேறு இடத்திற்கு நகர முடியவில்லை. பாதுகாப்பிற்காக மருத்துவர்கள் வெளியே சென்று விட்டனர். பாத்திமாவின் பெற்றோர், முறையே 3 மற்றும் 1 வயதுடைய அவரது 2 குழந்தைகள் மருத்துவமனையின் கீழ்தளத்திற்கு சென்று விட்டனர். அந்த கர்ப்பிணி தாயின் கணவர் ராணுவ வீரர். அலெப்போ நகருக்கு வெளியே பணியில் இருந்து உள்ளார்.
இதுபற்றி பாத்திமா அச்சத்துடன் கூறும்போது, நான் அவனை போர்த்தியபடி அணைத்து கொண்டேன். நிலநடுக்கம் நிற்கும் வரை, எங்களை காப்பாற்றும்படி இறைவனிடம் வேண்டி கொண்டேன் என நினைவு கூர்ந்து உள்ளார். அவர் தனது குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, விமான நிலையம் அருகே தற்காலிக நிவாரண பகுதி ஒன்றில் குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.
அவர்கள் வசித்து வந்த கட்டிடம் நிலநடுக்க பாதிப்பில் சிக்கவில்லை. எனினும், அந்த பகுதிக்கு செல்ல முடியாத வகையில் வழியில் கட்டிடங்கள் பாதிப்பில் சிக்கி உள்ளன. இதனால், அவற்றை சீர் செய்த பின்னரே அந்த பகுதி மக்கள் வசிப்பதற்கான பகுதியாக மாறும்.