சிரியாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு
|சிரியாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமெரிக்க படைகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்டனர். இருநாடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்த அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டு அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
ஆனால் சமீபகாலமாக ஈராக் மற்றும் சிரியாவில் மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. அப்பாவி பொதுமக்களை குறிவைத்து அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சிரியாவின் டெய்ர் அஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் வயலில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் வேலை முடிந்து 3 பஸ்களில் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ்கள் செல்லும் பாதையில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்த பயங்கரவாதிகள் பஸ்கள் அந்த பகுதிக்கு வந்ததும் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் 3 பஸ்களும் சின்னாபின்னமாகின. அதன் பின்னரும் வெறி அடங்காத பயங்கரவாதிகள் பஸ்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.
இந்த கொடூர தாக்குதலில் 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.