ஆஸ்திரேலிய பள்ளிக்கூடத்தில் அறிவியல் சோதனையின்போது திடீர் தீ விபத்து: மாணவர்கள் படுகாயம்
|ஆஸ்திரேலிய பள்ளிக்கூடத்தில் அறிவியல் சோதனையின்போது திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.
நேற்று காலை இந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது அங்குள்ள ஒரு வகுப்பில் ஆசிரியரின் மேற்பார்வையில் மாணவர்கள் அறிவியல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோடியம் பைகார்பனேட் உள்ளிட்ட ரசாயனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அறிவியல் சோதனையில் தவறு நிகழ்ந்ததால் வகுப்பறையில் தீப்பிடித்தது.
ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உடலில் தீப்பற்றியது. மாணவர்கள் வலியில் அலறிதுடித்தனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வகுப்பறைகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓடி வந்தனர். அவர்களை தீயை அணைத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் ஒரு ஆசிரியரும் 11 வயதுக்குட்பட்ட டஜன் கணக்கான மாணவர்களும் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 மாணவர்களின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.