பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் துப்பாக்கி தோட்டாக்களை வீசிய மர்ம நபரால் பரபரப்பு
|இங்கிலாந்தில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடைபெற உள்ள சூழலில் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களை வீசி சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை வாசல் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நேற்று மாலை நபர் ஒருவர் சுற்றி திரிந்து உள்ளார். அவரிடம் பை ஒன்றும் இருந்து உள்ளது. திடீரென அவர் பையில் இருந்த நிறைய பொருட்களை தூக்கி, அரண்மனைக்குள் வீசியுள்ளார். அவற்றில் துப்பாக்கி தோட்டாக்களையும் வீசி எறிந்து உள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரை பெருநகர போலீசார் சுற்றி வளைத்து, கைது செய்தனர். அவரிடம் இருந்த கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்து உள்ளனர். வேறு ஏதேனும் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறாரா? என்றும் சோதனை நடந்தது. அவரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என போலீசார் கூறியுள்ளனர்.
அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் நிபுணர்களின் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. துப்பாக்கி சூடு எதுவும் நடைபெறவில்லை எனவும், இந்த சம்பவத்தில் அதிகாரிகளுக்கோ, பொதுமக்களுக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தலைமை காவல் கண்காணிப்பாளர் ஜோசப் மெக்டொனால்டு தெரிவித்து உள்ளார்.
இந்த தருணத்தில் இதனை பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விவகாரம் என்ற கோணத்தில் நாங்கள் அணுகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அரண்மனை பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.