தமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை.. இலங்கை கோர்ட்டு உத்தரவு
|மீனவர்கள் 10 பேரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை குடிவரவு தடுப்பு மையத்தில் இருப்பார்கள்.
கொழும்பு:
தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. அவ்வகையில் கடந்த மாதம் 23-ம் தேதி 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் பருத்திதுறை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 10 மீனவர்களுக்கும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்களை நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் என்றும், அப்போது படகு உரிமையாளர் ஆஜராகவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் உடைமைகளை மீண்டும் ஒப்படைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதாவது, 10 மீனவர்களுக்கும் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையானது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் 10 பேரும் உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. கொழும்பு புறநகர்ப் பகுதியான மிரிஹானாவில் உள்ள குடிவரவு தடுப்பு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள். இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் முடியும்வரை, அவர்கள் அங்கு இருப்பார்கள்.