அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது!
|ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை கடத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கலிபோர்னியா,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்தார்.
கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர்.ஆரோஹி தேரி, ஜஸ்லீன் கவுர், ஜஸ்தீப் சிங் மற்றும் அமந்தீப் சிங் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் இந்தியாவில் உள்ள பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.
அந்த குடும்பம் துப்பாக்கி முனையில் மர்ம நபரால் கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று மத்திய கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் நான்கு பேரின் உடல்கள், இருப்பதை கண்ட ஒரு விவசாய தொழிலாளி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.உடனே பழத்தோட்டத்தில் பலியானவர்களின் உடல்களை அதிகாரிகள் மீட்டனர்.
போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்தனர், இந்த நிலையில், ஜீசஸ் மானுவல் சல்காடோ என்ற 48 வயது நபர் நேற்று நள்ளிரவில் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் தற்கொலைக்கு முயன்றார்.
எனினும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர் ஜீசஸ் மானுவல் சல்காடோ மெர்சிட் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கொடூரமான சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும், ஏதேனும் தடயங்கள் உள்ளதாக என்பதையும் துப்பறியும் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
கலிபோர்னியா மறுவாழ்வுத் துறையின் பதிவுகளின்படி, சல்காடோ ஏற்கெனவே பல ஆண்டு காலம் சிறையில் இருந்தார்.
இந்திய குடும்பத்தினர் தொழில் செய்து வந்த இடத்தில், சல்காடோ பல நாட்கள் தெருவில் சிறிது நேரம் சுற்றித்திரிவார். இதை அடிக்கடி பார்த்துள்ளதாக இந்திய குடும்பத்தினரின் வீட்டின் அருகே வசித்து வரும் நபர் கூறினார்.
முன்னதாக இதே போன்றதொரு சமபவத்தில் 2005இல், சால்வடோ தனது முதலாளியையும் குடும்பத்தையும் அவர்களின் வீட்டில் துப்பாக்கி முனையில் கடத்தி வைத்திருந்தார்.
அதன் பின், அவர் கைது செய்யப்பட்டார். 2007இல் ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையடித்ததற்காக 11 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். அதன்பின், ஒரு மாதம் கழித்து, தடை செய்யப்பட்ட பொருளை வைத்திருந்ததற்காக அவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். அதன்பின், சல்காடோ 2015 முதல் 2018 வரை பரோலில் விடுவிக்கப்பட்டார்.
இந்திய குடும்பத்தை கடத்தி பணம் பறிக்கவே அவர் முயற்சி எடுத்தார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.