அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்து பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக அனுமதி நீட்டிப்பு
|அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்துகளை பெறுவதற்கு கீழ் கோர்ட்டு விதித்திருந்த கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்து, சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக நீட்டிப்பு செய்து உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையானது, கடந்த 50 ஆண்டுகாலம் நீடித்து வந்த நிலையில், தேசிய அளவிலான சட்டப்பூர்வ உத்தரவை கடந்த ஆண்டு ஜூனில், அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட பலரும் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு விதித்த தடையை தொடர்ந்து, 13 அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை அமலில் உள்ளது.
எனினும், கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி அளிக்கப்பட்ட மாகாணங்களில், மற்ற மருந்துகளை போன்று மேற்கூறிய மாத்திரைகள் விநியோகத்தில் மருந்து நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. நேரடியாக விற்பனை செய்தும் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடனான குறிப்புகளின்படி மருந்துகளை மெயில் வழியே அனுப்பியும் வருகின்றன.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தடை அமெரிக்காவில் ஒரு புறம் சர்ச்சையை கிளப்பியபோதும், டெக்சாஸ் மற்றும் வாஷிங்டனில் உள்ள நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை சமீபத்தில் வழங்கியது மற்றொரு சர்ச்சை ஏற்படுத்தி உளளது.
இதன்படி, கருக்கலைப்பு மாத்திரைக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஒப்புதல் அளித்தபோதும், டெக்சாஸ் நீதிபதி, 7 நாள் காலஅவகாசம் கேட்டு உள்ளார்.
ஆனால், வாஷிங்டன் நகர அரசு நீதிபதி, 12 மாகாணங்களில் இந்த மாத்திரை கிடைக்கும் வகையில் எப்.டி.ஏ. பார்த்து கொள்ள வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார். இதனால், நீதிபதிகளின் இருவேறு தீர்ப்பால் அடுத்து என்ன செய்வது என் தெரியாமல் மக்கள் மற்றும் அரசு காத்திருக்கிறது.
இந்த சூழலில், கருக்கலைப்புக்கு அனுமதி அல்லது தடை ஆகியவற்றில் முடிவு எடுப்பதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது என கூறி கீழ் கோர்ட்டின் கட்டுப்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. இதன்படி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சாமுவேல் அலிட்டோ கடந்த வாரம் வெளியிட்ட உத்தரவில், புதன்கிழமை (நேற்றிரவு) 11.59 மணிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என கூறினார்.
எனினும், காலஅவகாசம் நிறைவான சூழலில், உத்தரவு எதுவும் பிறப்பிக்காத சூழலில், சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது. இதன்படி, கீழ் கோர்ட்டின் கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு வெள்ளி கிழமை (ஏப்ரல் 21) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால், கருக்கலைப்பு மாத்திரை மற்றும் மருந்துகளை பயன்படுத்துவது பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய இந்த கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்துவது என்பது எளிது. வீட்டில் இருந்தபடியே உபயோகப்படுத்தி கொள்ளலாம். மருத்துவ உதவி எதுவும் தேவைப்படாது. பிற மாத்திரைகளை விட இது வேறுபட்டு உள்ளது. பாலியல் உறவுக்கு பின்னர் கர்ப்பம் உருவாகாமல் இருக்க, உடனடியாக பிற மாத்திரைகளை பெண்கள் எடுக்கின்றனர்.
ஆனால் இந்த மாத்திரையானது, பெண் கர்ப்பிணியானது உறுதியானதும் கருக்கலைப்பு நடைபெறுவதற்கான விசயங்களை தூண்டுகிறது. உண்மையில் இதனுடன் கூடுதலாக ஒரு மருந்தும் எடுத்து கொள்ள வேண்டும்.
முதலில், மைப்பிரிஸ்டோன் ஆனது புரோஜெஸ்டிரோன் எனற ஹார்மோன் உற்பத்தியை தடுக்கிறது. அதற்கு 48 மணிநேரத்திற்கு பின் எடுத்து கொள்ளும் மிசோபுரோஸ்டால் மருந்து, ரத்தபோக்கு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி பெண்ணின் கருப்பை முழுவதும் காலி செய்கிறது.
இந்த மைப்பிரிஸ்டோன் மற்றும் மிசோபுரோஸ்டால் மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை (எப்.டி.ஏ.) 2000-ம் ஆண்டில் அனுமதி வழங்கியது. 10 வார கர்ப்பத்திற்குள் மாத்திரைகளை எடுத்து கொள்ளும்போது, அது வெற்றியடைகிறது.