இஸ்ரேலுக்கு ஆதரவு; நிலைப்பாட்டை மாற்றிய சீனா
|இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என சீனா ஒப்பு கொண்டுள்ளது.
பீஜிங்,
இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.
210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 18-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவு மந்திரி வாங் யி தொலைபேசி வழியே இஸ்ரேல் வெளியுறவு மந்திரி எலி கோஹெனை தொடர்பு கொண்டு நேற்று பேசினார். அப்போது அவர், ஒவ்வொரு நாட்டுக்கும், தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது.
ஆனால், சர்வதேச மனிதநேய சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். இதனால், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என முதன்முறையாக சீனா ஒப்பு கொண்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உள்ளன.
பாலஸ்தீன விவகாரத்தில் ஒரு விரிவான, நீண்டகால தீர்வை விரைந்து காண வேண்டும் என்றும் இதற்காக எகிப்து மற்றும் பிற அரபு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட தயார் என்றும் கடந்த வாரம் சீன அதிபர் ஜின்பிங் கூறினார். உடனடி போர்நிறுத்தம் வேண்டும் என்றும் கூறினார்.
தொடக்கத்தில், ஹமாஸ் அமைப்பு மீது கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் சீனா ஒதுங்கி இருந்தது. இதனால், இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருக்கும்படி சீனாவை, அமெரிக்கா கேட்டு கொண்டது. இஸ்ரேலும் வெளிப்படையாக சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தொடர் மோதலால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது என சீன வெளியுறவு மந்திரி வாங் கூறினார். இந்த வாரம் வாங், அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ள சூழலில், இஸ்ரேல் விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை சீனா மாற்றியுள்ளது.
சீன அதிபர் ஜின்பிங் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடைய இந்த பயணத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். இஸ்ரேல் போர் நடந்து வரும் சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.