விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினை: விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்
|விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவுகள் மற்றும் த்ரஸ்டர்களில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய நாசா மற்றும் போயிங் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் கடந்த 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர்.
இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் பயணத்திட்டம் திடீரென 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
அவர்கள் பயணம் செய்ய வேண்டிய விண்கலமான ஸ்டார்லைனை போயிங் நிறுவனம் வடிவமைத்திருந்தது.
இந்த விண்கலத்தில் லேசாக ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. 5 முறை கசிவு ஏற்பட்டதன் காரணமாக விண்கலத்தை இயக்க முடியாமல், பூமி திரும்பும் பயணம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் திரும்பி வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதுபற்றி நாசா அதிகாரி ஸ்டீவ் ஸ்டிச் கூறியதாவது:
ஸ்டார்லைனரின் முக்கிய உந்துவிசை அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விண்வெளி நிலையத்துடனான இணைப்பில் இருந்து விண்கலத்தை பிரித்து பூமியின் வளிமண்டலத்திற்கு செலுத்துவதற்கு இந்த அமைப்பு அவசியம் தேவை. புறப்படுவதற்கான உந்துவிசை சாதனமான த்ரஸ்டர்களை இயக்கும்போது அதிக வெப்பமடைந்தது. அத்துடன், உந்துவிசைக்கு பயன்படுத்தப்படும் ஹீலியம் வாயு தொடர்ந்து கசிந்தது.
ஸ்டார்லைனர் விண்கலம் சாதாரண சூழ்நிலையில் 45 நாட்கள் வரை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இருப்பினும், தேவைப்பட்டால், விண்கலத்தில் உள்ள பல்வேறு மாற்று அமைப்புகள் (backup systems) மூலம் இந்த கால அளவை 72 நாட்கள் வரை நீட்டிக்க முடியும். இதனால், விண்கலத்தின் தொழில்நுட்ப பிரச்சினைகளை கண்டறிந்து சரிசெய்வதற்கு பொறியாளர்களுக்கு போதுமான கால அவகாசம் கிடைக்கும். இதன்மூலம் விண்கலத்தை விண்வெளி நிலையத்தில் இருந்து எந்த சிக்கலும் இன்றி வெளியேற்றி பூமிக்கு திரும்பச் செய்ய முடியும்.
ஹீலியம் வாயு கசிவுகள் மற்றும் த்ரஸ்டர்களில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய நாசா மற்றும் போயிங் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதற்காக பொறியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். எங்கு, என்ன தவறு நடந்துள்ளது? என்பதை கண்டறிந்து சரி செய்வதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோருடன் விண்கலம் பாதுகாப்பாக திரும்பி வரும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே 'ஸ்டார்லைனர்' விண்கலத்தில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய முடியாவிட்டால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் பாதுகாப்பாக மீட்பதற்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை அழைக்கலாம் என தெரிகிறது.